சிறுவன் உடல் மீட்பு
மங்கலத்தில் பாறைக்குழியில் மூழ்கி அக்காள்-தம்பி பலியான சம்பவத்தில் அக்காளின் உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
மங்கலம்
மங்கலத்தில் பாறைக்குழியில் மூழ்கி அக்காள்-தம்பி பலியான சம்பவத்தில் அக்காளின் உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
தண்ணீரில் மூழ்கி பலி
மங்கலத்தை அடுத்த பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 38). சொந்தமாக விசைத்தறி வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி (30). இவர்களுடைய மகள் சங்கவி (10), மகன் சாந்தனு (8). சங்கவி பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும், சாந்தனு 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள பாறைக்குழி அருகே நேற்று முன்தினம் விளையாடிக்கொண்டிருந்தனர். 80 அடி ஆழம் கொண்ட இந்த பாறைக்குழியில் 70 அடிக்கு தண்ணீர் உள்ளது.
அப்போது சங்கவியும், சாந்தனுவும் தண்ணீரில் கை, கால் கழுவ சென்றபோது முதலில் கால்வழுக்கி சாந்தனு தண்ணீரில் விழுந்து மூழ்கினான். அவனை காப்பாற்ற முயன்ற சங்கவியும் தண்ணீரில் மூழ்கினாள்.
இது பற்றிய தகவல் தெரிந்ததும் பல்லடம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்று அக்காள், தம்பியின் உடலை தேடினர். அப்போது சங்கவி உடலை மட்டும் மீட்க முடிந்தது. அதன்பின்னர் இரவாகி விட்டதால் சாந்தனு உடலை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை 7 மணி முதல் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் 8 வீரர்கள் கொண்ட குழுவினர் சாந்தனு உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மதியம் 3 மணியளவில் சாந்தனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story