காரில் மது கடத்தி வந்த 3 பேர் கைது


காரில் மது கடத்தி வந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 3:02 AM IST (Updated: 3 July 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அருகே காரில் மது கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தாராபுரம்
தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அருகே காரில் மது கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் ஒரு சிலர் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 
இதனை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அலங்கியம் போலீசார் தாராபுரம்- பழனி சாலையில் உள்ள தாசநாய்க்கன்பட்டி சோதனைச்சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் தன்ராஜ் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
மதுபாட்டில்கள் கடத்தல்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 
அப்போது அந்த காரின் டிக்கியிலும், பின்சீட்டிலும், மது பாட்டில்கள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  இதையடுத்து காரில் இருந்தவர்களை அலங்கியம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். 
விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), அவரது நண்பர் செல்வம் (32), திருநெல்வேலி மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த கலையரசன் (36) என்பது தெரியவந்தது. 
கைது
இவர்கள் 3 பேரும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் கன்னிவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
மேலும் அவர்களிடமிருந்து 356 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கார் நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story