எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய்புகார் அளிப்பவர்கள் மீது கொள்ளையடித்ததாக எதிர்புகார் செய்யுங்கள்:சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய்புகார் அளிப்பவர்கள் மீது கொள்ளையடித்ததாக எதிர் புகார் கொடுங்கள் என சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய்புகார் அளிப்பவர்கள் மீது கொள்ளையடித்ததாக எதிர் புகார் கொடுங்கள் என சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வன்கொடுமை புகார்
புல்தானா மாவட்டம், காம்கான் தாலுகாவில் உள்ள சிதோடா அம்பிகாபூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் பேசியதாவது:-
பாடம் கற்பிப்பேன்...
நீங்கள் யாருக்கும் அநீதி செய்யக்கூடாது அதேநேரம் உங்களை அநீதிக்கு உட்படுத்த அனுமதிக்கவும் கூடாது. வன்கொடுமை சட்டம் பாதுகாப்பிற்கானது. அச்சுறுத்தல் மற்றும் தவறான பயன்பாட்டிற்கானது அல்ல.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் யாராவது பொய் புகார் அளித்தால், அந்த நபருக்கு எதிராக நீங்கள் கொள்ளையடித்ததாக எதிர் புகாரை பதிவு செய்யுங்கள். அப்போது தான் அவர்கள் தங்கள் புகாரை திரும்ப பெறுவார்கள். சட்டவிரோத சக்திகளுக்கு சாதி அல்லது மதம் இல்லை.
இதுபோன்ற சிக்கல்களை கையாள இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்குங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் நான் 10 ஆயிரம் பேருடன் வந்து அவர்களுக்கு பாடம் கற்பிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சர்ச்சைக்கு ஆளானவர்
இந்த நிலையில் அவர் பேசியதை சிலர் வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இது வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சைக்கு பெயர் போனவர். ஏற்கனவே சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பாட்னாவிசின் வாயில் கொரோனாவை திணிப்பேன் என கூறி சர்ச்சைக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story