கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சாவு
திருவள்ளூர் அருகே கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
ஆவடி,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 11-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 54). இவர், கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உடல் நலக்குறைவு காரணமாக திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் அயல் பணியாக (ஓ.டி) பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து கொரோனாவில் இருந்து மீண்ட அவர், கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டுக்கு வந்து தனிமைப்படுத்திகொண்டார்.
கடந்த 26-ந் தேதி திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கல்யாணி (44) என்ற மனைவியும், யுவராஜ் (26) மற்றும் தினேஷ்குமார் (23) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
உயிரிழந்த பத்மநாபன் உடல், நேற்று காக்களூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு மாலையில் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story