பக்தர்களின் வசதிக்காக திருத்தணி முருகன் கோவிலில் ரோப் கார், 2-வது மலைப்பாதை


பக்தர்களின் வசதிக்காக திருத்தணி முருகன் கோவிலில் ரோப் கார், 2-வது மலைப்பாதை
x
தினத்தந்தி 3 July 2021 4:30 AM GMT (Updated: 3 July 2021 4:30 AM GMT)

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார், 2-வது மலைப்பாதை அமைப்பது குறித்து படிக்கட்டில் நடந்து சென்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிப்பட்டு,

ஐந்தாம் படைவீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக கம்பிவட ஊர்தி (ரோப் கார்) அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் 2-வது மலைப்பாதை அமைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இந்து சமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளர் புவனேஸ்வரன், கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், இணை கமிஷனரும், செயல் அதிகாரியுமான பரஞ்சோதி, உதவி கமிஷனர் ரமணி, மாவட்ட பொறுப்பாளர் பூபதி மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

ஆய்வின்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவிலுக்கு வருகைதரும் மூத்த குடிமக்களின் வசதிக்காக ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது. புதிய 9 நிலை கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து, தேரோடும் வீதிக்கான இணைப்பு பாதையில், ஒரு ஆண்டுக்கான நாட்களை குறிக்கும்வகையில் 365 படிக்கட்டுகள், 42 மீட்டர் நீளத்துக்கு ரூ.98 லட்சம் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப் பணி குறித்தும், ரூ.9.10 கோடியில் ஆயிரத்து 380 மீட்டர் நீளம், 7.50 மீட்டர் அகலத்தில் 2-வது மலைப்பாதை அமைக்கவும், மழைநீர் வடிகால் மற்றும் தேவையான இடத்தில் பாலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கோவில் அடிவாரத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளில் மராமத்து பணிகளை மேற்கொண்டு மேம்படுத்தவேண்டும். திருமணங்கள் அதிகளவு நடைபெறும் காலங்களில் அவற்றை ஒழுங்குபடுத்தவும், கோவில் விடுதிகளில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் மேம்படுத்தவேண்டும். கோவில் குளத்தை உடனடியாக தூர்வாரி சீரமைக்கவேண்டும். பக்தர்கள் செல்லும் நடைபாதையில் உள்ள மண்டபம், சிறுகுளம், சன்னதி மேல்பகுதியில் உள்ள குளம் ஆகியவற்றைச் சீரமைக்கவேண்டும். கோவிலுக்கான தங்கத்தேர், வெள்ளித்தேரின் பழுது நீக்கி, விரைவில் இயக்க வேண்டும். இதுபோன்ற பணிகளை ஓராண்டுக்குள் போர்க்கால அடிப்படையில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு காலிப் பணியிடங்களை நிரப்பவும், கோவில்களில் பணி நிரந்தரம் செய்ய தகுதி உள்ள பணியாளர்களுக்கு அரசின் உத்தரவு பெற்று பணி நிரந்தரம் செய்யவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் கமிஷனர் அனுமதி இல்லாமல், சட்ட விதிகளைப் பின்பற்றாமல் பணி நியமனங்கள் செய்யப்பட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பெரிய குற்றம், சிறிய குற்றம் என்று பாரபட்சம் இல்லாமல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவறு செய்திருந்தால் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story