அம்பத்தூரில் ரப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து - 3 மணிநேரம் போராடி அணைத்தனர்
அம்பத்தூரில் ரப்பர் குடோனில் எரிந்த தீயை 3 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். எனினும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேது (வயது 53). இவருக்கு அம்பத்தூர் மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தமான குடோன் உள்ளது.
நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென ரப்பர் குடோனில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் புகைமூட்டமாக காணப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு துறை அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ரப்பர் குடோனில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடோனுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்கள், அவர்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் தீயணைப்பு வாகனங்கள் குடோன் அருகில் செல்ல முடியாமல் தடையாக இருந்த சுவரும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வாகனங்களை குடோனுக்கு அருகில் கொண்டு சென்று ரப்பர் குடோனில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணிநேரம் போராடி அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த ரப்பர் பொருட்கள் தீயில் கருகின. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.
இதுபற்றி அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் நேரில் சென்று பார்வையிட்டார்.
Related Tags :
Next Story