அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நாளை முதல் அனுமதி


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நாளை முதல் அனுமதி
x
தினத்தந்தி 3 July 2021 7:09 PM IST (Updated: 3 July 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வினால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை

ஊரடங்கு தளர்வினால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அருணாசலேஸ்வரர் கோவில்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். 

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

கொரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மீண்டும் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. இருப்பினும் கோவிலில் சாமிக்கு ஆகம விதிகளின் படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சுத்தம் செய்யும் பணி

அதைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவிலில் தங்க கொடி மரம், நந்தி, உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. 

கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்து விட்டு கோவில் பின் வழியாக சென்று திருமஞ்சன கோபுர வாசல் வழியாக வெளியே செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

 மேலும் அங்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் செல்லும் வகையில் வட்டமிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. நாளை கோவில்கள் திறப்பையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அமர்வு தரிசனத்திற்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் அமர்வு தரிசனம் செய்யவும், அர்ச்சணை செய்யும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் அமர்வு தரிசனத்திற்கும், அர்ச்சனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது என்று  கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Next Story