பனியன் நிறுவன தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முதலாளிகள் சங்கம் தொடங்க வேண்டும்


பனியன் நிறுவன தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முதலாளிகள் சங்கம் தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 3 July 2021 9:38 PM IST (Updated: 3 July 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

பனியன் நிறுவன தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முதலாளிகள் சங்கம் தொடங்க வேண்டும்

திருப்பூர், 
பனியன் நிறுவன தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முதலாளிகள் சங்கம் தொடங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிற்சங்க கூட்டுக்கூட்டம்
திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டு கூட்டம் நேற்று காலை பி.என்.ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
சம்பத் (சி.ஐ.டி.யு.), பூபதி (எல்.பி.எப்.), விஸ்வநாதன் (ஏ.டி.பி.), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.), மனோகர் (எம்.எல்.எப்.), முத்துசாமி (எச்.எம்.எஸ்.) உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சம்பள உயர்வு பேச்சுவார்த்தை
பனியன் தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் போடுவது வழக்கம். 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது. பனியன் தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என அனைத்து வகையான பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தொழிலாளர்கள் வாங்கும் சம்பளம் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இல்லை. எனவே தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்க உடனடியாக பேச்சுவார்த்தையை முதலாளி சங்கங்கள் தொடங்க முன்வரவேண்டும். சம்பள உயர்வு பேச்சு வார்த்தைக்கு தொழிற்சங்கத்தினரை அழைக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி அனைத்து தொழிலாளர்களுக்கும் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இ.எஸ்.ஐ. மூலம் மத்திய தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்து தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில் சில நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக தெரிகிறது. இது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது குறித்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் புகார் தெரிவிக்கலாம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story