தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து காத்துக்கிடந்தனர்.


தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து காத்துக்கிடந்தனர்.
x
தினத்தந்தி 3 July 2021 4:22 PM GMT (Updated: 3 July 2021 4:22 PM GMT)

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து காத்துக்கிடந்தனர்.

உடுமலை, 
உடுமலையில் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து காத்துக்கிடந்தனர்.
கொரோனா தடுப்பூசி
உடுமலையை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெஞ்சமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இங்கு 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக துண்டு பிரசுரம் ஒட்டப்பட்ட நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் காலை 5.30 மணிக்கே வந்து, டோக்கன் கொடுப்பதற்கு வருவாய் துறையினர் எப்போது வருவார்கள் என்று காத்திருந்தனர். 
நீண்ட நேரம் கால்வலிக்க நின்றிருந்த நிலையில் பள்ளியின் திண்ணையில் வரிசையில் இடம்பிடித்து உட்கார்ந்து இருந்தனர். உட்கார இடமில்லாத பலர் நின்று கொண்டிருந்தனர். முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முககவசம் அணிந்திருந்தனர். ஆனால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.
தாசில்தார்
இந்த நிலையில் தாசில்தார் வி.ராமலிங்கம் காலை 9 மணிக்கு அங்கு வந்தார். அப்போது அவர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசும்போது, பொதுமக்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்களோ அவர்களுக்கு அந்த வாக்குச்சாவடியில்தான் தடுப்பூசி போடப்படும். அவரவர் வாக்களித்த வாக்குச்சாவடிகளில் முகாம் நடக்கும் போது அங்கு அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்படி இந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி போடப்படும். அதனால் மற்றவர்கள் இங்கு காத்திருக்க வேண்டாம் என்றார். 
அப்போது ஊராட்சி மன்றத்தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு உடனிருந்தார். இதைத்தொடர்ந்து வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்திருந்த பொதுமக்கள் சிலர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பாலப்பம்பட்டி
இதேபோன்று உடுமலையை அடுத்து கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்த முகாமில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையிலேயே இந்த பள்ளிக்கு வந்திருந்து வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து, தடுப்பூசி போட்டு சென்றனர்.
இதேபோன்று உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் 300 பேருக்கும், ருத்ரப்பநகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமில் 250 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story