3-வது அலைக்கு தயாராகும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டு


3-வது அலைக்கு தயாராகும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டு
x
தினத்தந்தி 3 July 2021 4:25 PM GMT (Updated: 3 July 2021 4:25 PM GMT)

3வது அலைக்கு தயாராகும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டு

திருப்பூர்
கொரோனா 3-வது அலைக்கு தயாராகும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தின. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் அதிகமாக இருந்தது.
அரசின் நடவடிக்கைகள் காரணமாக இந்த பாதிப்பு குறைந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் கடந்த மாதம் நாள் ஒன்றின் பாதிப்பு அதிகபட்சமாக 2 ஆயிரத்தையும் கடந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கொரோனா படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
3-வது அலைக்கு தயார்
குறிப்பாக கொரோனா 2-வது அலை, முதல் அலையை விட தீவிரமாக இருந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டது. இதனால் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு திண்டாட்டம் ஏற்பட்டது. இதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் பலரின் ஏற்பாடுகள் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் படுக்கை வசதிகள் தட்டுப்பாடின்றி கிடைத்தது. நோயாளிகளின் இறப்பும் குறைந்தது. இதற்கிடையே தற்போது மாவட்டத்தில் கொரோனா நாள் ஒன்றின் பாதிப்பு 300-க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் கொரோனா படுக்கைகள் காலியாக உள்ளது. தற்போது 200-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. இருப்பினும் கொரோனா 3-வது அலைக்கும் தயாராகி உள்ளனர்.
குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு
இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. கொரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் 100 பேர் வரை மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாகி உள்ளன.
இதற்கிடையே கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சில அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளது. இதனால் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு 100-க்கும் மேற்பட்ட படுக்கைளுடன் தயார் நிலையில் உள்ளது. காலியாக உள்ள கொரோனா வார்டு தற்போது குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இது விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story