விழுப்புரம் கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி கையாடல்:ஒருவா் கைது
விழுப்புரத்தில் கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடியை கையாடல் செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்ரூபன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ திருச்சபையில் பொருளாளராக உள்ளார். இந்த திருச்சபைக்கு சொந்தமான வணிக வளாகம் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் 80 செண்ட் அளவில் உள்ளது.
இந்த இடத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.13 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு முன்பணமாக நேரடியாக ரூ.1 கோடியே 62 லட்சமும், ரூ.4 கோடியே 98 லட்சத்து 15 ஆயிரத்தை வரைவோலையாகவும் பெற்று அதனை திருச்சபையின் மத்திய கருவூல கணக்கில் வரவு வைக்குமாறு அப்போதைய செயலாளராக இருந்த சென்னை கொடுங்கையூர் தாய் நகரை சேர்ந்த சார்லஸ் (வயது 69) என்பவரிடம் திருச்சபை சார்பில் வழங்கப்பட்டது.
ரூ.5 கோடி கையாடல்
ஆனால் அந்த வரைவோலையில் குறிப்பிட்ட தொகையை திருச்சபை கணக்கில் வரவு வைக்காமல் சார்லஸ் மற்றும் அப்போதைய பொருளாளராக இருந்த மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரை அடுத்த கீழமேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஞானராஜ் ஆகியோர் திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் உள்ள ஒரு வங்கியின் மூலம் அந்த திருச்சபை பணத்தை கையாடல் செய்தனர். இதற்கு நண்பர்களான விழுப்புரத்தை சேர்ந்த வில்பர்ட் டேனியல், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சபையின் தற்போதைய பொருளாளரான ஆண்ட்ரூஸ்ரூபன் அளித்த புகாரின்பேரில் சார்லஸ், ஞானராஜ், வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஞானராஜை கடந்த மே மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சார்லஸ், வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரன், இருதயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, செந்தில்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், சார்லஸ் உள்ளிட்ட 3 பேரையும் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் சார்லஸ் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று, கும்பகோணத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த சார்லசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story