கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
வீடுகளுக்கே சென்று
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், முகாம்களுக்கு வர இயலாவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவது போன்ற முன்னேற்பாடு பணிகள், சுகதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒத்துழைக்க வேண்டும்
இது குறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தடுப்பூசி முகாம்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளையும் பங்கேற்க செய்து 100 சதவீதம் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதரத்துறையினருக்கு, அனைத்து வகை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு, தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சதிஷ்குமார், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) லதா மற்றும் தாசில்தார், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story