மடத்துக்குளம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் விளை நிலங்கள் பாழாகி வருவதால் விவசாயிகள் வேதனை
மடத்துக்குளம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் விளை நிலங்கள் பாழாகி வருவதால் விவசாயிகள் வேதனை
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் விளை நிலங்கள் பாழாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மாவட்ட எல்லை
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக மடத்துக்குளம் உள்ளது. மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகில் தொடர்ச்சியாக குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், கட்டிடக் கழிவுகள் போன்றவை கொட்டப்படுகிறது.
இதனால் இந்த பகுதி முழுவதும் வீசும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடுகள், இறைச்சிக் கழிவுகளைத் தின்ன வரும் நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் என்று வாகன ஓட்டிகள் படும் அவதி தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த பகுதிக்கு அருகில் ராஜவாய்க்கால் மற்றும் அமராவதி ஆறு உள்ளது. தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள் மட்டுமல்லாமல் அதன் மறுகரையில் உள்ள அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழித்தடத்திலும் கட்டிடக்கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கிறார்கள்.
பாழாகும் பாசன நிலங்கள்
இதனால் அமராவதி ஆறு மற்றும் பாசன நிலங்களுக்குச் செல்லும் வழித்தடம் படிப்படியாக குறுகி வருகிறது. மேலும் காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் இந்த பகுதிக்கு அருகிலுள்ள ஆயக்கட்டு பாசன நிலங்களில் விழுந்து மண்ணில் புதைகிறது. மேலும் கழிவுகள் ராஜவாய்க்காலில் விழுந்து நீருடன் கலந்து பல இடங்களில் விவசாயிகளின் விளைநிலங்களை சென்றடைகிறது. இதனால் பாசன நிலங்கள் பாழாகி வருகிறது.
இறைச்சிக் கழிவுகளால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாலும், நாய்கள் அதிக அளவில் நடமாடுவதாலும் இங்குள்ள விளைநிலங்களுக்கு வேலைக்கு வருவதற்கு கூலித் தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே சாகுபடியையே கைவிடும் நெருக்கடிக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.
இந்த பகுதியில் குப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்கிறார்கள் என்பதை விட குப்பைகளை அவ்வப்போது மண்ணில் மூடி மறைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இந்த பகுதியிலுள்ள குப்பைகளை முழுமையாக சுத்தம் செய்யவும் மீண்டும் இந்த பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகளை வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
Related Tags :
Next Story