பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை


பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 July 2021 10:23 PM IST (Updated: 3 July 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் பிரதான சாலைகளில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைப்பதை தடுக்க சாலையின் இருபுறமும் போக்குவரத்து போலீசார் கயிறு அமைத்துள்ளனர். இதற்குள்தான் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கயிறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பதிவு எண் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு நின்ற போலீசார் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் கூறியதாவது:- 

30 நிமிடத்துக்கு மேல்

பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கயிற்றுக்குள்தான் நிறுத்த வேண்டும். கயிற்றின் வெளிபகுதியில் இருசக்கர வாகனம், 3 சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. கடையின் முன்பு 30 நிமிடத்துக்கு மேல் இரு சக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டால் அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவுசெய்வதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும். 
அதேபோல் சாலையோரங்களில் கடைவைத்து பூ வியாபாரம் செய்யவும், தள்ளுவண்டியிலும் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது. 

முககவசம் அணிய வேண்டும்

ஆட்டோவில் 2 நபருக்கு மேல் செல்லக் கூடாது. மீறினால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட், முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story