திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x
தினத்தந்தி 3 July 2021 10:42 PM IST (Updated: 3 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் வந்தனர். அங்கு விருந்தினர் மாளிகை முன்பு அவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். இக்கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும். அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பக்தர்கள் தங்கும் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவுப்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

பின்னர் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ராணிமகாராஜபுரம் பகுதியில் உள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நயினார்பத்து பகுதியில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் பார்வையிட்டனர். முன்னதாக, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது, தமிழக அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன், அறநிலையத்துறை ஆணையர் சந்திரமோகன், தமிழக சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குனர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், உதவி கலெக்டர் கோகிலா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, தாசில்தார் முருகேசன், அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தூத்துக்குடி உதவி ஆணையர் ரோசாலி சுமதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story