மருத்துவ குழுவினருக்கு சீர்வரிசை கொடுத்து கவுரவித்த கிராமமக்கள்
கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவ குழுவினருக்கு சீர்வரிசை கொடுத்து கவுரவித்த கிராமமக்கள் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்
உளுந்தூர்பேட்டை
கொரோனா தொற்று பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் 5 பேரை கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இங்கு சீக்கம்பட்டு மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.
இதில் சீக்கம்பட்டு கிராமத்தில் வசிக்க கூடிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,026 பேர் உள்ளனர். இவர்களில் புலம்பெயர்ந்து அண்டை மாநிலங்களில் பணிபுரிபவர்கள், வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் தவிர்த்து மீதமுள்ள 715 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதை அடுத்து கொரோனாவின் பிடியில் இருந்து கிராமமக்களை காப்பாற்றும் நோக்கில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவைபுரிந்து தடுப்பூசி போட்ட டாக்டர் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு கிராமமக்கள் வெற்றிலை, பாக்கு, பழவகைகளுடன் சீர் வரிசை கொடுத்து கவுரவித்து பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, முன்னதாக சீக்கம்பட்டு கிராமமக்கள் கொரோனா தடுப்பூசி போட தயங்கி வந்தனர். சிலர் ஓடி ஒளிந்து கொண்டனர். பின்னர் கிராமத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதன் பின்னர் கிராமமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழ்நாட்டிலேயே சீக்கம்பட்டு கிராமத்தில் தான் முதல் முறையான 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story