திருச்செந்தூர் என்ஜினீயர் கொலையில் மேலும் 3 நண்பர்கள் சிறையில் அடைப்பு
திருச்செந்தூர் என்ஜினீயர் கொலையில் மேலும் 3 நண்பர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஜீவாநகரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சிவமுருகன் (வயது 25). டிப்ளமோ என்ஜினீ்யரான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் புனேயில் உள்ள நிறுவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சிவமுருகன் கடந்த 17-ந்தேதி சொந்த ஊரான திருச்செந்தூருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 1-ந்தேதி இரவு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடம் அருகில் கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை தொடர்பாக, சிவமுருகனின் நண்பரான வீரபாண்டியன்பட்டணம் வாவுநகரை சேர்ந்த சங்கர் மகன் சண்முகசுந்தரை (26) போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல்படி, கொலை சம்பவத்தை மறைத்ததற்காக சிவமுருகனின் நண்பர்கள் காமராஜர் சாலையை சேர்ந்த கார்த்திக் (25), சரவணபொய்கை தெரு வண்ணமுத்துகுமரன் (24), பட்டர்குளம் தெரு முருகானந்தம் (23) ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடந்த 1-ந் தேதி மதியம் சிவமுருகன், அவரது நண்பர்கள் கார்த்திக், வண்ணமுத்துகுமரன், முருகானந்தம் ஆகியோர் திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் அருகில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது வீரபாண்டியன்பட்டினம் சண்முகசுந்தர் மது குடிப்பதற்காக வந்தார். இதற்காக அவர் வீட்டில் இருந்து பித்தளை குடத்தை எடுத்து பழைய இரும்பு பாத்திரம் எடுக்கும் கடையில் விற்றார். பின்னர் அங்கு வந்து நண்பர்களுடன் மது குடித்தார்.
சிறிது நேரத்தில் கார்த்திக் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் சிவமுருகன் புனேவுக்கு வேலைக்கு செல்வதற்காக வைத்திருந்த டிக்கெட் இருந்த பர்ஸ் மற்றும் செல்போனை வண்ணமுத்துகுமரன் வீட்டிற்கு எடுத்து சென்றார். இரவு நேரமாகியதால் முருகானந்தம் சாப்பிடுவதற்காக சென்று விட்டார்.
அப்போது மேலும் மதுபாட்டில் வாங்குவதற்காக சிவமுருகன், சண்முகசுந்தரை அழைத்துக்கொண்டு ஏ.டி.எம்.மிற்கு சென்று ரூ.300-ஐ எடுத்து கொடுத்தார். பின்னர் இருவரும் பள்ளிக்கூட வளாகத்திற்கு சென்று மது குடித்தனர். அப்போது மதுபோதையில் சிவமுருகன் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார். அப்போது சிவமுருகனுக்கும், சண்முகசுந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சண்முகசுந்தர் அங்கு கிடந்த கட்டையால் சிவமுருகனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் சண்முகசுந்தர் அங்கிருந்து வெளியேறி, ஒரு ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த கார்த்திக், வண்ணமுத்துகுமரன், முருகானந்தம் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். பின்னர் சண்முகசுந்தர் தன்னால் நடக்க முடியவில்லை என்றும், வீட்டில் கொண்டு விடும்படியும் நண்பர்களிடம் தெரிவித்தார். உடனே அவரை கார்த்திக் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, வாவுநகரில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டு உள்ளார். இதற்கிடையே, சிவமுருகனை அவரது தம்பி முத்தரசன் தேடியபோது, பள்ளிக்கூட வளாகத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது ெதரியவந்தது.
இவ்வாறு கைதான 4 பேரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைதான 4 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு தமிழரசு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story