பொள்ளாச்சியில் ரூ.66 கோடியில் புதிதாக போலீஸ் குடியிருப்பு
பொள்ளாச்சியில் ரூ.66 கோடியில் புதிதாக போலீஸ் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ரூ.66 கோடியில் புதிதாக போலீஸ் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் குடியிருப்பு
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு 3 தளங்களுடன் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் 240 போலீசாருக்கும், 12 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
பொள்ளாச்சி கிழக்கு, மேற்கு, மகாலிங்கபுரம், தாலுகா, நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், மகளிர் போலீஸ் நிலையங்கள் பணிபுரியும் போலீசார் மட்டுமன்றி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர், ஆழியாறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.
போலீஸ் குடியிருப்பு கட்டி 37 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால் வீடுகள் பழுதடைந்து காணப்பட்டன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அங்கு வசிக்கும் போலீசாருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நோட்டீசு அனுப்பப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த வீடுகளை காலி செய்து, வாடகை வீடுகளில் குடியேறினர். ஆனால் அதன்பிறகு பழுதடைந்த குடியிருப்பை இடித்து அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்கள் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் சமூக விரோதிகளின் கூடாரமானது.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்
இதை தொடர்ந்து ஏலம் விடப்பட்டு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் போலீஸ் குடியிருப்பு இருந்த இடம் மைதானம் போன்று காட்சி அளிக்கிறது. மீண்டும் அந்த இடத்தில் புதர்செடிகள் வளர தொடங்கி உள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
போலீஸ் குடியிருப்பு இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றோம். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இதற்கிடையில் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய இருப்பதால் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதே குடியிருப்பில் வசித்தால் மிகவும் தைரியமாக இருக்கலாம்.
தற்போது பழைய கட்டிடத்தை இடித்து அகற்றப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் தொடங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே வருகிற பட்ஜெட்டில் குடியிருப்பு கட்டுவதற்கு நிதி ஒதுக்க அரசுக்கு புதிதாக பொறுப்பேற்று இருக்கும் டி.ஜி.பி. அழுத்தம் கொடுக்க வேண்டும். நிதியை பெற்று விரைவில் கட்டுமான பணிகளை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ரூ.66 கோடியில் புதிய கட்டிடம்
இதுகுறித்து காவல் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள போலீஸ் குடியிருப்பை இடித்து அகற்றப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.66 கோடி நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும்.
புதிய குடியிருப்பில் இன்ஸ்பெக்டர்களுக்கு 10 வீடுகள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 30 வீடுகள் மற்றும் போலீசாருக்கு 226 வீடுகள் சேர்த்து 266 வீடுகள் கட்டப்படுகிறது. மேலும் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story