ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் பொதுமக்கள் சேவைக்காக செயல்படும் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
போலீசாருக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் பொதுமக்கள் சேவைக்காக செயல்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கூறினார்.
கரூர்
ரோந்து வாகனங்கள்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்து கொண்டு, கரூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு, சட்டம் ஒழுங்கு பணி, பொதுமக்கள் புகார் மீதான உடனடி நடவடிக்கைக்கும், மாவட்டம் முழுவதும் உள்ள 17 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களுக்கும் தலா 2 இருசக்கர வாகனம் வீதம் 34 ரோந்து வாகனங்களும், நகர பகுதியில் 2 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேட்டி
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் பொதுமக்கள் சேவைக்காக செயல்படும். ரோந்து பணியில் இருப்பவர்கள் பொதுமக்களின் அழைப்பிற்கு உடனடியாக சென்றும், குற்றங்கள் நடைபெறாமல் கண்காணித்தும், சட்டம், ஒழுங்கை பேணிகாப்பதற்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ரோந்து வாகனங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்நேரத்திலும் தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி செய்ய ரோந்து வாகன போலீசார் காத்திருப்பார்கள். மேலும் போலீசாருக்கு உடலில் அணிந்து கொள்ளும் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு முகாம்
கரூர் மாவட்டத்தில் ரோந்து பணியினை தீவிரபடுத்துவதற்காக ரோந்து வாகனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் 2 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. கரூர் டவுன் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது திருக்காம்புலியூர் முதல் வீரராக்கியம் வரையும், வெங்கக்கல்பட்டி முதல் செம்மடை வரையும் என 2 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
இதுவரை 1403 கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வந்துள்ளோம். வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணித்து வருகிறோம். மேலும் கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அதாவது நேற்று) குழந்தை திருமண விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதேபோல் வாரம் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். பொதுமக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story