ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வினியோகம்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வினியோகம்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் முழுநேர, பகுதிநேர ரேஷன் கடைகள், நடமாடும் கடைகள் என மொத்தம் 402 ரேஷன் கடைகள் உள்ளன. மேலும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 195 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை 2 கட்டங்களாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அரிசியை விட கூடுதலாக 5 கிலோ அரிசி மத்திய அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் மற்றும் இந்த மாதத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூடுதலாக அரிசியை வாங்கி கொள்ளலாம். ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து மத்திய அரசு திட்டத்தின் கீழ் கூடுதலாக அரிசி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒரு நபர் இருந்தால் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் அரிசியை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாழ்வாதாரம் இழந்து வேலைக்கு செல்ல முடியாத ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி கூறும்போது, நீலகிரியில் கொரோனா நிவாரண தொகை 99 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மளிகை பொருட்கள் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க, அதிகமாக அரிசி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story