2 நாளில் 2,261 பேருக்கு கொரோனா தடுப்பூசி


2 நாளில் 2,261 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 July 2021 12:16 AM IST (Updated: 4 July 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் உள்பட 2,261 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிவகாசி, 
சிவகாசியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் உள்பட 2,261 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தடுப்பூசி
சிவகாசி பகுதியில் அதிக அளவில் பட்டாசு மற்றும் அச்சக தொழி லாளர்கள் வசித்து வரும்நிலையில் அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு சென்று தடுப்பூசிகளை போட சுகாதாரத்துறையினர் முடிவு செய்து அதற்கான சிறப்பு முகாம்களை கடந்த 2 நாட்கள் நடத்தினர். இதில் சிவகாசியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் அச்சகத்தில் பணியாற்றி வரும் 1,681 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
 இதே போல் சிவகாசி நகராட்சி பழைய அலுவ லகத்தில் நேற்று காலை பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற பொதுமக்கள் நகராட்சி பழைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. போக்குவரத்தும் கடுமையாக பாதித்தது. இதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களை, போலீசார் வரிசையாக தடுப்பூசி போட அனுமதித்தனர். ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளி இன்றி கூடியதால் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டது. பின்னர் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் 580 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தாமதம் 
சிவகாசி பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு உரிய குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சிவகாசி பகுதியில் தினமும் குறைந்தது 300 பேருக்காவது கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது. ஆனால் இதுகுறித்த தகவல்களை கணினியில் பதிவு செய்ய ஒரே ஒரு நபர் தான் உள்ளார். அவர் தினமும் 200 பேரின் விவரங்களை மட்டும்தான் பதிவு செய்யமுடியும். இதனால் கடந்த 2 வாரங்களாக இந்த விவரங்கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த விவரங்களை பதிவு செய்ய கூடுதல் ஊழியர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வருகிற திங்கட் கிழமை முதல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் பின்னர் தடுப்பூசி போட்டவர்களுக்கு எல்லாம் ஓரிரு நாட்களில் அதற்கான குறுஞ்செய்திகள் வந்துவிடும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story