வழிபாட்டு தலங்களில் தூய்மை பணிகள் தீவிரம்
70 நாட்களுக்கு பிறகு நாளை முதல் திறக்கப்படவுள்ளதால் வழிபாட்டு தலங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர்:
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. கோவில்களில் தினசரி பூஜைகள் மட்டும் நடத்திட அனுமதி அளித்து, பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால், அந்த மாவட்டங்களில் மட்டும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் கடந்த 28-ந் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை. தற்ேபாது நாளையுடன் (திங்கட்கிழமை) ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் வருகிற 12-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
தூய்மை பணிகள்
இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தொடர்ந்து நாளை முதல் மற்ற மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்களை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் நடத்த அனுமதியில்லை.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களான இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மற்ற கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று முதல் நடைபெற்றது. வழிபாட்டு தலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும், வளாகத்தை முழுவதுமாக தூய்மைபடுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது.
முககவசம் கட்டாயம்
மேலும் வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்களுக்கு கைகளை கழுவுவதற்கு சானிடைசர் வைக்கவும், அவர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
70 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் நாளை திறக்கப்பட உள்ளதால் கூட்டம் அதிகளவில் வரக்கூடும் என்பதால் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story