நெல்லையில் கோவில்களை சுத்தம் செய்யும் பணி


நெல்லையில் கோவில்களை சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 4 July 2021 12:44 AM IST (Updated: 4 July 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கோவில்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

நெல்லை:
நெல்லையில் கோவில்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

வழிபாட்டு தலங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை தாக்கம் அதிகமாக இருந்தது. இதையொட்டி கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து இருப்பதால், ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வழிபாட்டு தலங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யும் பணி

இதையொட்டி கோவில் ஊழியர்கள் கோவில்களில் பக்தர்கள் வந்து செல்லும் பாதையை நேற்று சுத்தம் செய்தனர். நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் சுவாமி, அம்பாள் சன்னதி மற்றும் பிரகார பகுதிகளில் சுத்தம் செய்தனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அங்கு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
மேலும் 50 சதவீத பக்தர்கள், சமூக இடைவெளியுடன் நின்று வழிபட வேண்டும் என்றும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று செல்ல ஏதுவாக வட்டம் போடும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

ஓட்டல்கள்

இதேபோல் ஊரடங்கு தளர்வில் நாளை முதல் ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வழக்கமாக ஓட்டல்களில் போடப்பட்டுள்ள நாற்காலிகளில் 50 சதவீத நாற்காலிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நெல்லை மாநகரில் உள்ள ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட தேவையான ஏற்பாடுகளை செய்தனர். 
மேலும் வாடிக்கையாளர்கள் டம்ளர்களில் டீ, காபி வாங்கி குடிக்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லையில் நேற்றே ஒருசில கடைகளில் டம்ளர்களில் வாடிக்கையாளர்களுக்கு டீ, காபி விற்பனை செய்யப்பட்டது.

Next Story