தாடிக்கொம்பு அருகே மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் நகை பறிப்பு


தாடிக்கொம்பு அருகே மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 July 2021 7:26 PM GMT (Updated: 3 July 2021 7:26 PM GMT)

தாடிக்கொம்பு அருகே மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் மர்மநபர்கள் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள கெண்டையகவுண்டனூரை சேர்ந்தவர் தீபலட்சுமி. இவர் வேடசந்தூரை அடுத்த கூம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.  அலுவலகத்தில் மாற்று பணி செய்து வருகிறார். 
இந்தநிலையில் தீபலட்சுமி நேற்று இரவு 8 மணி அளவில் பணி முடிந்து மொபட்டில் கெண்டையகவுண்டனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். தாடிக்கொம்புவை அடுத்த குடகனாறு பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் அவர் வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 மர்மநபர்கள் வந்தனர். அப்போது அவர்கள், தீபலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனர். 
இதனால் சுதாரித்து கொண்ட தீபலட்சுமி, தனது நகையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்த நகை 2 ஆக அறுந்தது. இதில், 4 பவுன் நகை தீபலட்சுமியிடமும், ஒரு பவுன் நகை மர்மநபர்கள் கையிலும் சிக்கியது. 
இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் தீபலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Next Story