குமரியில் கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்


குமரியில் கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 July 2021 1:37 AM IST (Updated: 4 July 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

வழிபாட்டு தலங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில், 
வழிபாட்டு தலங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று பரவல் வெகுவாக குறைந்ததைத் தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் 5-ந் தேதி (அதாவது நாளை) முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு விழா நடத்த அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த அறிவிப்பின் மூலம் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் 56 பெரிய கோவில்கள் உள்பட மொத்தம் 490 கோவில்களும், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் 731 சிறிய கோவில்களும் உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலின் வெளிப்பிரகாரங்களை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது. நேற்று மாலை முதல் உள்பிரகாரங்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.  கோவில் சுவர்கள் மற்றும் கல் மண்டபங்கள், நாகர் சிலைகள் ஆகியவற்றை கோவில் ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் முடிவடையும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் சுவர்கள், கல் மண்டபங்கள், உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகியவற்றை தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களில் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்றுடன் நிறைவடையும்.
நாளை அதிகாலை முதல் சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என 1221 கோவில்களிலும் நடைபெறும் பூஜைகள், அபிஷேகங்கள் போன்றவற்றுக்கு பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள், மசூதிகள் போன்றவற்றிலும் திருப்பலி மற்றும் ஆராதனைகள், தொழுகைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கு வசதியாக ஆலயங்கள் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியும் தொடங்கியது.

Next Story