மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்: கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள்


மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்: கொரோனா தடுப்பூசி செலுத்த  அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 July 2021 8:11 PM GMT (Updated: 3 July 2021 8:11 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாலையிலேயே பொதுமக்கள் திரண்டனர்.

சேலம்
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு, 1 லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் என மொத்தம் 8 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்புக்கு தகுந்தவாறு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மாவட்டம் முழுவதும் 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அந்த மையங்களுக்கு 52 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசியும், 2-ம் தவணை மட்டும் போடுவதற்காக 2 ஆயிரத்து 880 கோவேக்சின் தடுப்பூசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதிகாலையிலேயே திரண்டனர்
கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் பலர் அதிகாலையிலேயே மையங்களுக்கு ஆர்வமுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் அமருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் சில மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. தடுப்பூசி போடும் மையங்களில் ஊழியர்கள், பொதுமக்களிடம் சரியாக முககவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருந்தனர். இதுதவிர கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மையங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆணையாளர் ஆய்வு
இதனிடையே சேலம் மாநகராட்சி பகுதிகளில் நேற்று 33 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. ஒரே நாளில் 18,026 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்னதாக, மணக்காடு காமராஜர் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, புத்துமாரியம்மன் கோவில் உயர்நிலைப்பள்ளி, அம்மாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story