கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு


கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு
x
தினத்தந்தி 3 July 2021 8:11 PM GMT (Updated: 3 July 2021 8:11 PM GMT)

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை என்றும், ரூ.1,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சேலம்
லாரிகள் நிறுத்தம்
கொரோனா வைரசின் 2-வது அலை பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள், ஸ்டீல் நிறுவனங்கள், துணி தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் தொழில் நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை.
இதனால் லாரிகளுக்கு லோடுகள் சரியாக கிடைப்பதில்லை. மேலும் டீசல் விலை உயர்வாலும் பல லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு வழக்கமான நாட்களில் ஜவ்வரிசி, மைதா, சிமெண்டு, கல்மாவு, இரும்பு தளவாடங்கள், மஞ்சள் உள்ளிட்டவை அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கால் இது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு) பொருளாளர் தனராஜ் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் கொடுத்தாலும் பல தொழிற்சாலைகள் திறக்கப்படாததாலும், டீசல் விலை உயர்வாலும் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர லாரி டிரைவர்கள், கிளீனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் லாரிகளை பழுது பார்க்கும் பட்டறைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். லாரி தொழிலை பாதுகாக்க தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான காலாண்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story