ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.86 ஆயிரம் திருட்டு


ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.86 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 3 July 2021 8:18 PM GMT (Updated: 3 July 2021 8:18 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த, வங்கியில் நகையை அடகு வைத்து பெற்ற பணமான 86 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

ஜெயங்கொண்டம்:

நகையை அடகு வைத்து...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் தீபா(வயது 20). இவர் குடும்ப செலவிற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.86 ஆயிரம் பெற்றுள்ளார்.
அந்த பணத்தை கைப்பையில் வைத்து, அதனை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்து பூட்டி விட்டு துணி வாங்குவதற்காக பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றார். அங்கு ஸ்கூட்டரை கடையின் முன்பு நிறுத்திவிட்டு, அவர் கடைக்குள் சென்றார்.
பணம் திருட்டு
இந்நிலையில் வங்கியில் இருந்து அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த தீபாவின் ஸ்கூட்டர் இருக்கையை கைத்தாங்கலாக தூக்கி, அதில் இருந்த ரூ.86 ஆயிரத்தை கைப்பையோடு திருடிச்சென்றனர். இந்நிலையில் கடையில் இருந்து வெளியே வந்த தீபா, வாங்கிய துணிக்கு பணம் கொடுப்பதற்காக வாகனத்தின் இருக்கை பகுதியை திறந்து பார்த்தபோது, பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து ஜவுளிக்கடையின் முன்பு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அதில் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டர் இருக்கையை தூக்கி பணத்தை திருடியதும், அவர் பணம் திருடுவதை மறைக்கும் வகையில் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் நின்ற காட்சியும் பதிவாகி இருந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தீபா கொடுத்த புகாரின்பேரில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, பணத்தை திருடிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயங்கொண்டத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story