காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு வரும் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு வரும் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பணியிடங்கள்
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் 10 ஆயிரத்து 329 2-ம் நிலை காவலர் பணியிடங்களும், 110 சிறை காவலர் பணியிடங்களும், 458 தீயணைப்பாளர் பணியிடங்களும் மற்றும் கடந்த முறை நிரப்பப்படாத பணியிடங்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 813 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த தேர்விற்காக 13 ஆயிரத்து 205 ஆண்களும், 2 ஆயிரத்து 304 பெண்களும் என மொத்தம் 15 ஆயிரத்து 509 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான எழுத்து தேர்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில் உடல்தகுதி தேர்வு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த உடல்தகுதி தேர்வுகள் வருகிற 26-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்பாடு
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 355 பெண்கள் மற்றும் ஆயிரத்து 489 ஆண்கள் என மொத்தம் ஆயிரத்து 844 பேர் இந்த தேர்வில் கலந்து கொள்கின்றனர். ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த உடல்தகுதி தேர்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story