கோலாரில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து


கோலாரில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
x

கோலாரில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கோலார் தாலுகா முழுவதும் மின் வினியோம் தடைப்பட்டுள்ளது.

கோலார்:
  
டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது

  கோலார் அருகே மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென்று வெடித்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த தீ, மளமளவென துணை மின் நிலையம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ விபத்தால், துணை மின் நிலையத்தில் இருந்து கரும்புகை வானுயர எழும்பியது.

  இதனை பார்த்து கோலார் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கோலார் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் துணை மின் நிலையம் அருகே திரண்டனர். இதையடுத்து, இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

5 தீயணைப்பு வாகனங்கள்

  அதன்பேரில் தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு கரும்புகையுடன் மளமளவென எரிந்ததால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  ஆனால் துணை மின் நிலையத்தில் இருந்து டிரான்ஸ்பார்மர்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து நடந்த சமயத்தில் அந்தப்பகுதியில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மின்தடை

  கோலார் புறநகரில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், நேற்று மதியம் முதல் கோலார் தாலுகா முழுவதும் மின் வினியோம் தடைப்பட்டுள்ளது. தீயில் எரிந்து நாசமான டிரான்ஸ்பார்மர்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மின் தடையால் கோலார் தாலுகா மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

  இதுபற்றி அறிந்ததும் கோலார் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஊழியர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story