2 விற்பனை நிலையங்களில் இருந்து ரூ.5 லட்சம் பெட்ரோல் திருட்டு


2 விற்பனை நிலையங்களில் இருந்து ரூ.5 லட்சம் பெட்ரோல் திருட்டு
x
தினத்தந்தி 3 July 2021 8:52 PM GMT (Updated: 3 July 2021 8:52 PM GMT)

யாதகிரி அருகே 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருந்து, ரூ.5 லட்சம் பெட்ரோலை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் நடந்து உள்ளது.

யாதகிரி:
  
ரூ.100-ஐ தாண்டியது

  மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கர்நாடகம் உள்பட பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருந்து மர்மநபர்கள் பெட்ரோலை திருடிய சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

  யாதகிரி (மாவட்டம்) அருகே ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களும் பணியை முடித்துவிட்டு, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். இந்த நிலையில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் சென்ற மர்மநபர்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை துணிகளால் மூடினார்கள்.

ரூ.5 லட்சம் பெட்ரோல் திருட்டு

  பின்னர் பெட்ரோலை நிரப்பி வைக்கும் தொட்டிகளை திறந்து பைப்புகள் மூலம் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை திருடி சென்று விட்டனர். நேற்று காலை ஊழியர்கள் எழுந்து பார்த்த போது 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் யாதகிரி புறநகர் போலீசார் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் சென்று விசாரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் கண்காணிப்பு கேமராக்களை துணிகளால் மூடி ரூ.5 லட்சம் மதிப்பிலான பெட்ரோலை திருடியது தெரிந்தது. இதுகுறித்த புகார்களின்பேரில் யாதகிரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story