திருச்சி தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார்: சமூகநலத்துறை அதிகாரிகள் குழுவினர் 2-வது நாளாக விசாரணை


திருச்சி தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார்: சமூகநலத்துறை அதிகாரிகள் குழுவினர் 2-வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 3 July 2021 8:56 PM GMT (Updated: 3 July 2021 8:56 PM GMT)

திருச்சி தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார் அளித்த விவகாரம் தொடர்பாக சமூகநலத்துறை அதிகாரிகள் குழுவினர் 2-வது நாளாக கல்லூரியில் விசாரணை நடத்தினார்கள்.

திருச்சி, 
திருச்சி தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார் அளித்த விவகாரம் தொடர்பாக சமூகநலத்துறை அதிகாரிகள் குழுவினர் 2-வது நாளாக கல்லூரியில் விசாரணை நடத்தினார்கள்.

பாலியல் புகார்

கொரோனா முதல் அலைக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லூரி திறக்கப்பட்டது. பின்னர் கொரோனா 2-வது அலையால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இந்தநிலையில் திருச்சி புத்தூரில் உள்ள பிஷப்ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வந்த பால் சந்திரமோகன் மீது முதுகலை முதலாமாண்டு மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்தனர். இதையடுத்து வக்கீல் ஜெயந்திராணி உள்பட 7 பேர் கொண்ட உள்விசாரணை கமிட்டியினர் விசாரணை நடத்தினார்கள்.

இந்த கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். நேற்றும் 2-வது நாளாக பாலியல் புகார் அளித்த மாணவிகள், கல்லூரி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மாணவிகளிடம் விசாரணை

இதுகுறித்து மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி தமிமுனிஷா கூறுகையில், "திருச்சியில் தனியார் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் மீது மாணவிகள் அளித்த புகார் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்திய கமிட்டியிடம் விசாரணை நடத்தினோம். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடமும் இது பற்றி கேட்டோம். கல்லூரியில் பாலியல் புகார் எழுந்தால் சமூகநலத்துறை சார்பில் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடியும்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாணவிகள் முன்வந்தால் முறைப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி புகார் அளிக்க முன்வராவிட்டால் மாணவிகளுக்கு உரிய கவுன்சிலிங் அளிக்கப்படும். மேலும், சமூகநலத்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது" என்றார்.

மேலும் 3 பேர் மீது நடவடிக்கை 

இதற்கிடையே கல்லூரி நிர்வாகக்குழு கூட்டம் வரும் 6-ந் தேதி நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரி உதவி பேராசிரியை மற்றும் மேலும் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Next Story