கார்வாரில் தடுப்பூசி மையத்திற்குள் நுழைய முயன்ற பொதுமக்கள்
கார்வாரில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி மையத்திற்குள் நுழைய முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கார்வார்:
கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு தடுப்பூசி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்படு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் தடுப்பூசி கிடைக்காததால் மக்கள் போராட்டம் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அதுபோல் உத்தரகன்னடா மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி மையத்திற்குள் பொதுமக்கள் நுழைய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தடுப்பூசி தட்டுப்பாடு
கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் ஒன்று உத்தரகன்னடா. மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். முதல் டோஸ் தடுப்பூசியை 3 லட்சத்து 81 ஆயிரம் பேரும், 2-வது டோஸ் தடுப்பூசியை 77 ஆயிரம் பேரும் போட்டுள்ளனர்.
ஆனால் கடந்த 3 நாட்களாக உத்தரகன்னடா மாவட்டத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பூசி மையத்திற்குள் நுழைய முயற்சி
இந்த நிலையில் கார்வாரில் உள்ள கிரிம்சன் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. தடுப்பூசி போடுவதற்காக 500-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். ஆனால் தட்டுப்பாடு காரணமாக 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட மருந்து இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் தடுப்பூசி கிடைக்காது என கருதி அங்கு கூடியிருந்தவர்கள், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அப்போது சிலர் தடுப்பூசி மைய அலுவலக கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஆகியோர் கதவை பூட்டினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரபரப்பு
மேலும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே கூடுதல் போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், போராட்டம் நடத்தியவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
Related Tags :
Next Story