மத்திய மந்திரி சதானந்தகவுடா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஒளிபரப்ப தடை - பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவு


மத்திய மந்திரி சதானந்தகவுடா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஒளிபரப்ப தடை - பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 July 2021 2:34 AM IST (Updated: 4 July 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை மந்திரி சதானந்தகவுடா சம்பந்தப்பட்ட வீடியோக்களை ஒளிபரப்ப தடை விதித்து பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ஆபாச வீடியோ விவகாரம்

  கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதையடுத்து, அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதுபோல், மேலும் பல மந்திரிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

  இதையடுத்து, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மந்திரிகள் தங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைதளங்களில் வெளியிட தடையிட பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சதானந்தகவுடா வழக்கு

  அதன்படி, கோர்ட்டும் அந்த மந்திரிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

  இந்த நிலையில், மத்திய உரம் மற்றும் ரசாயன துறை மந்திரியான சதானந்தகவுடாவும் தான் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தொலைகாட்சி சேனல்கள், சமூக வலைதளங்களில் ஒளிபரப்பவும், வெளியிடவும் தடை கோாி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வீடியோக்கள் ஒளிபரப்ப தடை

  அவர் தொடர்ந்திருந்த வழக்கில், மத்திய மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில் எனக்கு எதிராக போலியாக வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைதளங்களில் வெளியிட தயாராகி வருவதாகவும், அதனால் நான் சம்பந்தப்பட்ட போலி வீடியோக்களை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறி இருந்தார். அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

  விசாரணை முடிந்த நிலையில், மத்திய மந்திரி சதானந்தகவுடா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஒளிபரப்பவும், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மத்திய மந்திரி சதானந்தகவுடா, வீடியோ விவகாரத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story