காங்கிரசில் இருந்து விலகியவர்களை மீண்டும் சோ்க்கமாட்டோம் - சித்தராமையா பேட்டி


காங்கிரசில் இருந்து விலகியவர்களை மீண்டும் சோ்க்கமாட்டோம் - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 3 July 2021 9:15 PM GMT (Updated: 3 July 2021 9:15 PM GMT)

காங்கிரசில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றும் இதுகுறித்து மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனை நடத்துவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மீண்டும் கட்சியில் சேர்க்க...

  கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்திருந்தது. இந்த நிலையில், 2023-ம் ஆண்டில் சட்ட்சபை தேர்தலில் வெற்றி பெறவும், கட்சியை வளர்க்கவும், காங்கிரசில் இருந்து விலகி சென்ற எம்.எல்.ஏ.க்களை மீண்டும் சேர்க்க ஆலோசித்து வருவதாகவும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் கூறி இருந்தார்.

  இந்த விவகாரத்திற்கு நேற்று முன்தினமே எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனை

  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களை மீண்டும் சேர்த்து கொள்வோம் என்று யாரும் கூறவில்லை. எவ்வளவு பெரிய பிரளயம் வந்தால் கூட 14 எம்.எல்.ஏ.க்களையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து கொள்ள மாட்டோம் என்று விதானசவுதாவில் நான் பேசியது உண்மை தான். தற்போதும் அதையே தான் கூறுகிறேன்.

  காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு 14 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு சென்றதால் கூட்டணி அரசே கவிழ்ந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த விவகாரம் குறித்து மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

மத்திய அரசுக்கு அழுத்தம்

  மத்திய மந்திரி சதானந்தகவுடா தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வீடியோக்கள் குறித்து பத்திரிகைகள், தொலைகாட்சி சேனல்களில் செய்தி வெளியிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கி உள்ளார். ஒரு திருடனை பற்றி, அந்த திருடனுக்கு தான் தெரியும். மத்திய மந்திரியாக இருக்கும் ஒருவர் இதுபோன்று தான் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் சம்பந்தப்பட்ட செய்தியை வெளியிடக்கூடாது என்று கோர்ட்டில் தடை வாங்குவது சரியானது அல்ல.

  மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் மாநிலம் முழுவதும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் மாநில அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. மாநகராட்சி கமிஷனர் தடுப்பூசி தட்டுப்பாடாக இருப்பதாக கூறினால், சுகாதாரத்துறை மந்திரி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று சொல்கிறார். மாநிலத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், கூடுதல் தடுப்பூசி வழங்க கோரிக்கு மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனை செய்ய அரசு தவறி வருகிறது.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story