கர்நாடகத்தில் மேலும் ஊரடங்கு தளர்வுகள் - வணிகவளாகங்கள் திறக்கலாம்; தியேட்டர்கள் திறக்க தடை நீட்டிப்பு


கர்நாடகத்தில் மேலும் ஊரடங்கு தளர்வுகள் - வணிகவளாகங்கள் திறக்கலாம்; தியேட்டர்கள் திறக்க தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 4 July 2021 2:50 AM IST (Updated: 4 July 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 100 சதவீதம் பேர் பங்கேற்றகவும், வணிகவளாகங்களை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

எடியூரப்பா ஆலோசனை

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கில் 2 தடவை சில தளர்வுகள் செய்யப்பட்டு வந்தது. கடந்த முறை அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் ஓடுவதற்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில், அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதால், ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வுகளை செய்வது குறித்து நேற்று பெங்களூருவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். ஊரடங்கில் எந்த மாதிரியான தளர்வுகளை செய்யலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை முடிந்த பின்பு நேற்று இரவு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

100 சதவீதம் அனுமதி

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால் ஊரடங்கில் தளர்வுகள் செய்வது குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். விரிவான ஆலோசனைக்கு பின்பு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 5-ந் தேதி (அதாவது நாளை) முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 100 சதவீதம் ஊழியர்களுடன் பணியாற்றி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வணிகவளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

  மெட்ரோ ரெயில் சேவை மற்றும் அரசு போக்குவரத்து கழகங்களில் 100 சதவீத பயணிகள் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம், பிற குடும்ப நிகழ்ச்சிகளில் 100 சதவீதம் மக்கள் கலந்து கொள்ளலாம். நீச்சல் குளங்களில் விளையாட்டு போட்டிகளுக்காக மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

  கொரோனா காரணமாக மாநிலம் முழுவதும் தற்போது இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் இரவு நேர ஊரடங்கின், நேரம் குறைக்கப்படுகிறது. அதன்படி, வருகிற 5-ந் தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும். இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது ஊரடங்கு இருந்து வருகிறது.

  நாளையுடன் (அதாவது இன்று) வார இறுதி நாட்களில் அமலில் இருந்து வந்த ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுகிறது. வருகிற 5-ந் தேதியில் இருந்து வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் இருக்காது. திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள், போராட்டங்கள், ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. மாநிலத்தில் பப்புகள் திறக்கவும் அனுமதி கிடையாது. பார்கள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதுபோல், தியேட்டர்கள் திறப்பதற்கும் அனுதி வழங்கப்படவில்லை.

கலெக்டர்களுக்கு அதிகாரம்

  தற்போது அரசு பிறப்பித்துள்ள இந்த ஊரடங்கு தளர்வுகள் வருகிற 5-ந் தேதியில் இருந்து வருகிற 19-ந் தேதி அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும். குடகு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. அந்த மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் செய்வது குறித்து மாவட்ட கலெக்டர்களே, மாவட்ட பொறுப்பு மந்திரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாகவும், மக்களின் நலன் கருதியும் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது.

  ஆனாலும் மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்காவிட்டால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் திரும்ப பெறப்படும். எனவே கொரோனா விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

  பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது?

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை செய்து முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மந்திரிகள், அரசு அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சுகாதாரத்துறை, பள்ளி, கல்வித்துறை மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசிக்கப்படும். அந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.


Next Story