சிறுவாபுரி முருகன் கோவில் அருகே பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


சிறுவாபுரி முருகன் கோவில் அருகே பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 4 July 2021 8:49 AM IST (Updated: 4 July 2021 8:49 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாபுரி முருகன் கோவில் அருகே பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரியில் முருகன் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். சென்னை, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புதுரோடு என்ற இடத்தில் இருந்து சிறுவாபுரி கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து கோவிலை அடையலாம். அதேபோன்று திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆரணி-புதுவாயல் நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுச் சாலையில் இருந்து சிறுவாபுரி கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால் கோவிலை வந்தடையலாம்.

இந்த நிலையில், புதுரோடு முதல் அகரம் கூட்டுச்சாலை வரை உள்ள 10 கிலோ மீட்டர் தூரம் சாலை போக்குவரத்து நெரிச்சலுடன் இருந்தது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இதனால் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்ல மிகவும் அவதிக்குள்ளானார்கள். போதிய அரசு பஸ்களை இயக்குவதில் சிரமம் இருந்து வந்தது. 60 அடி அகலம் கொண்ட இந்த சாலை ஆக்கிரமிப்பால் வாகன போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.

நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும், கோவில்களுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த கோவிலுக்கு வந்து செல்ல இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு 3 முறை அறிவிப்பு கடிதம் கொடுத்தும் தானாக முன்வந்து வியாபாரிகள் அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்ற பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வத்துக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆர்.டி.ஓ. செல்வம், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் ஆண்டி, உதவி பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி ஆகியோர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கட்டிடங்கள், குடிசைகள், 100 கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

கோவிலுக்கு கிழக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு இந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.

மேலும், சென்னையில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இந்த இடம் தயார் செய்யப்படும் என்றும், திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கோவிலுக்கு வடக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 88 சென்ட் நிலத்தில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Next Story