திருத்தணியில் பலத்த மழையால் வேருடன் சாலையில் சாய்ந்த 150 வருட ஆலமரம்


திருத்தணியில் பலத்த மழையால் வேருடன் சாலையில் சாய்ந்த 150 வருட ஆலமரம்
x
தினத்தந்தி 4 July 2021 3:31 AM GMT (Updated: 4 July 2021 3:31 AM GMT)

திருத்தணியில் பலத்த மழையால் 150 வருட ஆலமரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. இதனால் 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணி தாலுகாவை சேர்ந்த திருவாலங்காடு பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதையடுத்து ஆர்.கே. பேட்டை பகுதியில் 34 மில்லிமீட்டர் மழையும், திருத்தணியில் 30 மில்லிமீட்டர் மழையும், பள்ளிப்பட்டு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. இந்த திடீர் மழை நள்ளிரவு வரை தொடர்ந்து பெய்ததால் திருத்தணியில் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்து வந்த 150 ஆண்டு கால பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று அதிகாலை சாலையில் சாய்ந்தது. அப்போது பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் செல்ல வேண்டிய பஸ்கள், லாரிகள் மற்றும் எந்த வாகனமும் அந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

மேலும் அந்த பகுதியில் இருந்த 4 மின்சார கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் அங்கு 7 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும் மின்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ஆலமரத்தை வெட்டி 5 மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது.

Next Story