சென்னை விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 July 2021 10:55 AM IST (Updated: 4 July 2021 10:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனா்.

அப்போது தஞ்சாவூரைச் சோ்ந்த அகிலன் (வயது 27) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அகிலனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

சார்ஜாவில் ஒருவர் இந்த தங்கத்தை தன்னிடம் கொடுத்து, சென்னைக்கு சென்றால் விமான நிலையத்தில் ஒருவர் அதை பெற்றுக்கொண்டு செலவுக்கு ரூ.10 ஆயிரம் தருவார் என கூறினார். பணத்துக்கு ஆசைப்பட்டு அதை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

அகிலனை விமான நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்து சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அகிலனிடம் இருந்து தங்கத்தை வாங்க வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது உவைசி (27) என்பவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அகிலன், முகமது உவைசி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story