ஏமன் நாட்டில் இருந்து சென்னை வந்த 2 பேர் கைது
ஏமன் நாட்டில் இருந்து சார்ஜா வழியாக சென்னை வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சமீர் (வயது 38), புதுக்கோட்டையை சோ்ந்த பெரோஸ்கான் (33) ஆகியோரின் பாஸ்போா்ட்டை ஆய்வு செய்தனா். அதில் இருவரும் ஏமன் நாட்டில் இருந்து சார்ஜா வழியாக சென்னை வந்ததை கண்டுபிடித்தனர்.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக சென்று வந்திருப்பது தெரியவந்தது. 2 பேரிடமும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு டிரைவர் வேலைக்கு சென்றோம். விசா காலம் முடிந்ததால் இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்தோம். ஆனால் விசா காலம் முடிந்து தங்கி இருந்ததால் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக கூறி சிறையில் அடைத்து கடும் தண்டனை வழங்குவார்கள் என்பதால் ஏமன் நாட்டுக்கு சென்றோம்.
அங்கிருந்து பாஸ்போர்ட்டு தொலைந்துவிட்டதாக இந்திய தூதரகத்தில் சொல்லி அவசர கால சான்று பெற்று சார்ஜா வழியாக சென்னை வந்தோம். ஏமன் தடை செய்யப்பட்டு உள்ள நாடு என எங்களுக்கு தெரியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து சமீர், பெரோஸ்கான் ஆகிய 2 பேரை யும் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story