வேலூர் மண்டலத்தில் இருந்து கூடுதலாக 25 பஸ்கள் இயக்கம். அதிகாரிகள் தகவல்
வேலூர் மண்டலத்தில் இருந்து சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 25 பஸ்கள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் போக்குவரத்துக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 28-ந் தேதி முதல் 202 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு 227 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தனியார் பஸ்களும் இயங்குகின்றன.
இந்த நிலையில் தொற்று பரவல் குறைவு காரணமாக கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வாக இன்று (திங்கட்கிழமை) முதல் கோவை, திருப்பூர், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து அந்த மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 25 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலூர் மண்டலத்தில் இருந்து சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக 25 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைத்தவிர பயணிகளின் வருகைக்கு ஏற்ப அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றும்படி அனைத்து கண்டக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story