திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் :
நத்தம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நாமம் போடப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும், கொரோனா கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, தாலுகா குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, பொன்னுச்சாமி, தவநூதன், விஜயவீரன், கிளை நிர்வாகிகள் குழந்தைவேல், பிச்சன் உள்பட கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்
வேடசந்தூரில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் மோட்டார்சைக்கிளுக்கு ஈமக்கிரியை நடத்துவது போன்று அதற்கு மாலை அணிவித்து இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய துணைச்செயலாளர் பாண்டியராஜன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பெரியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
குஜிலியம்பாறை
இதுபோல குஜிலியம்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன் சிறப்புரை யாற்றினார்.
முன்னதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முக்கிய வீதிகளில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்தனர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story