பொன்னாலம்மன் சோலை பகுதியில் பாதை அமைக்க அளவீடு செய்யும் பணி


பொன்னாலம்மன் சோலை பகுதியில் பாதை அமைக்க அளவீடு செய்யும் பணி
x
தினத்தந்தி 4 July 2021 9:32 PM IST (Updated: 4 July 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

பொன்னாலம்மன் சோலை பகுதியில் பாதை அமைக்க அளவீடு செய்யும் பணி

தளி:
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் பொன்னாலம்மன் சோலை உள்ளது. இங்குவிவசாயிகள் பயிர்களை கிணறு, ஆழ்குழாய் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர். மத்தளஓடை மற்றும் கால்வாய் நீர்வரத்தை அளித்து வருகிறது. அங்குள்ள விவசாயிகள் 15-க்கும் மேற்பட்டோர் பாதை வசதி இ்ல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கான இடுபொருட்களை கொண்டு செல்வது, விற்பனைக்கு எடுத்துச்செல்வது, உழவு பணிக்கு டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களை பயன்படுத்துவது, நோயாளிகள் முதியவர்களை அவசர கால சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது போன்றவை எட்டாக்கனியாக உள்ளது. 
மேலும் பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் உரிய நேரத்திற்கு செல்லமுடியவில்லை. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிகளில் நடந்து சென்று சாலையை அடைந்து உடுமலைக்கு செல்லவேண்டி உள்ளது. பாதை வசதி இல்லாததால் விலை பொருட்களை 2 சக்கர வாகனங்களில் கொண்டு சென்று தார்ச்சாலையை அடைந்த பின்பே சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதைத்தொடர்ந்து ரெட்டிபாளையம்பிரிவு - பாலாறுதுறை சாலையில் பாலாறும் மத்தள ஓடையும் இணையும் கூடுதுறையில் இருந்து அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாக பாதை வசதி அமைத்துத் தருமாறு கடந்த 6 மாத காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து மனு அளித்தனர். அதன் பேரில் உடுமலை தாசில்தார் ராமலிங்கம் தலைமையில் வருவாய்த்துறையினர் அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து முடித்துள்ளனர். பணியை மீண்டும் தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Next Story