கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி சமுதாயத்தில் பெண்கள் முன்னேற வேண்டும் கலெக்டர் லலிதா பேச்சு


கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி சமுதாயத்தில் பெண்கள் முன்னேற வேண்டும் கலெக்டர் லலிதா பேச்சு
x
தினத்தந்தி 4 July 2021 4:02 PM GMT (Updated: 4 July 2021 4:02 PM GMT)

செம்பனார்கோவிலில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி சமுதாயத்தில் பெண்கள் முன்னேற வேண்டும் என்று கலெக்டர் லலிதா பேசினார்.

பொறையாறு, 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கும் விழா ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர்முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து 427 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 952 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியுதவியை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் கல்வி என்பதை ஆயுதமாக பயன்படுத்தி சமூதாயத்தில் முன்னுக்கு வர வேண்டும். தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கின்ற வகையில் சீரிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பெண்கள் முயற்சி செய்தால் சாதிக்க முடியாதவை எதுவும் இல்லை. பெண் கல்வியை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தமிழக அரசானது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் 1098 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து தீர்வு காணுகின்ற வசதியை தமிழக அரசு உருவாக்கி தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலாஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் ஜான்சன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நாகை மாவட்ட சமூகநல கண்காணிப்பாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

Next Story