மடத்துக்குளம் பகுதியில் இயற்கை முறையில் பல பயிர் சாகுபடி மேற்கொள்வது மனதுக்கு மகிழ்ச்சி
மடத்துக்குளம் பகுதியில் இயற்கை முறையில் பல பயிர் சாகுபடி மேற்கொள்வது மனதுக்கு மகிழ்ச்சி
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் இயற்கை முறையில் பல பயிர் சாகுபடி மேற்கொள்வது மனதுக்கு மகிழ்ச்சி தருவதுடன் லாபகரமானதாகவும் உள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
9-க்கும் மேற்பட்ட பயிர்கள்
விவசாயம் என்பது இன்றைய நிலையில் ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது. விதைக்கும் போது நல்ல விலை விற்கும் விதைகள் அறுவடை செய்து விற்கும் போது மிகக் குறைந்த விலைக்கே விற்பனையாகும் நிலை உள்ளது. இதனால் எந்த பயிரைப் பயிரிடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.
இந்தநிலையில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் பல பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் ஒரு பயிர் கைவிட்டாலும் மற்றொரு பயிர் கைகொடுக்கும் என்பது விவசாயிகளின் எண்ணமாக உள்ளது.
அந்த வகையில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரே நிலத்தில் 9-க்கும் மேற்பட்ட பயிர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளார். வரப்புப் பயிராக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள், ஒருபுறம் வாழை, வாழையில் ஊடுபயிராக பொரியல் தட்டை, மறுபுறம் நிலக்கடலை, மற்றொரு புறம் சின்ன வெங்காயம், அதனைத் தாண்டினால் கத்தரி, கொஞ்சம் தக்காளி, வரப்புப் பயிராக மரவள்ளி, கால்நடைத் தீவனத்துக்காக நேப்பியர் புல், எல்லா பயிர்களுக்கும் ஊடுபயிராக தென்னம்பிள்ளை என்று 9-க்கும் மேற்பட்ட பயிர்களைப் பயிரிட்டுள்ளார்.
தொடர் நஷ்டம்
இதுகுறித்து விவசாயி கூறியதாவது:-
தக்காளி நட்டேன். விலையில்லாமல் வீணாக ரோட்டில் கொட்டும் நிலை ஏற்பட்டது. வெண்டைக்காய் சாகுபடி செய்தோம். வாங்க ஆளில்லாமல் வீணானது. இப்படிஒவ்வொரு பயிரின் சாகுபடியிலும் தொடர் நஷ்டத்தை சந்தித்தது தான் பாடம் கற்றுத்தந்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு சீசனிலும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலை ஏற்ற இறக்கம் உள்ளது. இதனால் விவசாயமும் பங்குச்சந்தை போல புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்புடன், அதிர்ஷ்டமும் கைகொடுத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. எனவே தான் பல பயிர் சாகுபடி செய்யும் முடிவெடுத்தோம்.
அதன்படி தற்போது முழுமையாக இயற்கை முறையில் பல பயிர்களையும் சாகுபடி செய்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் விளைபொருட்களை வீட்டு உபயோகத்துக்குத் தவிர மீதமுள்ளவற்றை விற்பனை செய்கிறோம். இதனால் விலை ஏற்ற இறக்கங்கள் எங்களை பெரிய அளவில் பாதிப்பதில்லை. அத்துடன் நல்ல பொருட்களை மக்களுக்கு விளைவித்துக்கொடுக்கிறோம் என்ற திருப்தி கிடைப்பதுடன், நல்ல பொருட்களை நாமும் நமது குடும்பமும் பயன்படுத்த முடிகிறது. இப்போது பெரிய அளவில் லாபம் கிடைக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் நஷ்டம் ஏற்படுவதில்லை. அத்துடன் மனதுக்கு நிறைவான வாழ்க்கையை இந்த இயற்கை முறை பல பயிர் சாகுபடி தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story