வேதாரண்யத்தில் பழமையான கோவில் மாயமானதாக புகார் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
வேதாரண்யத்தில், பழமையான கோவில் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. மூடிக்கிடந்த கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
அகத்திய முனிவருக்கு திருமணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் உள்ள சுவாமியை, மணவாள சுவாமிகள் என்றும் திருமறைக்காடர் என்றும் வேதாரண்யேஸ்வரர் என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நான்கு வேதங்கள் பூஜை செய்து வழிபட்டதால் இந்த கோவிலை மையமாக கொண்டு நகரை சுற்றி நான்கு புறமும் கீழ மறைக்காடர், மேல மறைக்காடர், வட மறைக்காடர், தென் மறைக்காடர் ஆகிய நான்கு கோவில்களும் மற்றும் பிடாரி கோவில், மாரியம்மன் கோவில், துர்க்கை அம்மன் கோவில், விநாயகர் கோவில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோவில்களுக்கு கோவில் திட்ட பதிவேட்டின் மூலம் பண்டையக்காலம் முதல் தினசரி பூஜை, நெய்வேத்தியத்திற்கு அரிசி, அபிஷேகங்களுக்கு பொருட்கள்,, தீபம் ஏற்ற எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. பல ஆண்டுளுக்கு முன்பு இந்த முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. பொதுமக்கள் தாங்களாகவே கோவில்களை புனரமைத்து பூஜைகள் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பழமை வாய்ந்த கோவிலான தென் மறைக்காடர் கோவில் எங்கு உள்ளது? என தெரியவில்லை. இந்த கோவில் மாயமாகி உள்ளது என்றும், தற்போது கோவில் எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இது தொடர்பாக கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் கோவில் இருந்த இடத்தை கண்டுபிடிக்காவிட்டால் கோர்ட்டு மூலம் கோவிலை மீட்போம் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர். இதேபோல் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. இதையும் மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே மாயமான கோவிலையும், கோவிலுக்கு சொந்தமான குளங்களையும் மீட்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story