வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடியாக உயர்வு


வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 4 July 2021 4:28 PM GMT (Updated: 4 July 2021 4:28 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு எதிரொலியாக, வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடியாக உயர்ந்தது.

ஆண்டிப்பட்டி:
முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு எதிரொலியாக, வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடியாக உயர்ந்தது. 
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.  
இந்த ஆண்டு தொடக்கம் முதலே வைகை அணையின் நீர்மட்டம் சராசரியாக 60 அடியிலேயே இருந்து வந்தது. தொடர் மழை காரணமாக கடந்த மே மாதம் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. 
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. 
மேலும் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக குறைந்தது. 
மீண்டும் 65 அடி
இந்தநிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல்போக நெல் சாகுபடி பணிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. 
இதன்காரணமாக வைகை அணைக்கு சராசரியாக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்த வண்ணம் இருந்தது. 
அதன்படி, நேற்றைய நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடியாக உயர்ந்தது. இதனால் வைகை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story