கல்வராயன்மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை
கல்வராயன்மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம்
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை உள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக கல்வராயன்மலை உள்ளது. இங்கு பெரியார், மேகம், கவியம், சிறுகலூர் உள்ளிட்ட 10 நீர்வீழ்ச்சிகள், படகு குழாம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளன. இதனால் கல்வராயன்மலை ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
இந்த நிலையில் வறட்சி காரணமாக கடந்த ஓராண்டு காலமாக கல்வராயன் மலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து இல்லை. மேலும் கொரோனா தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கல்வராயன்மலையே வெறிச்சோடி காணப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து மது அருந்துவது, சூதாட்டம் ஆடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது. இதில் சுற்றுலா தலங்கள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 நாட்களாக பெய்த கோடை மழையினால் கல்வராயன் மலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதை அடுத்து நேற்று கல்வராயன் மலைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். கடலூர், விழுப்புரம், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அதிக பயணிகள் குடும்பத்துடன் இருசக்கர வாகனம், கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததை காண முடிந்தது.
குளித்து மகிழ்வதற்காக பெரியார் நீர்வீழ்ச்சியில் இளைஞர்கள் அதிக அளவில் குவிந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவில் தண்ணீர் வரத்து இ்ல்லை. நூல் இழை போன்று தண்ணீர் கொட்டியதால் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுபற்றி விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியை பார்த்து இங்கு குடும்பத்துடன் வந்தோம். ஆனால் எதிர்பார்த்த வகையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து காணப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நாங்கள் படகு சவாரி செய்ய படகு குழாமுக்கு சென்றோம். அங்கும் படகுகள் இயக்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கால் சுமார் 3 மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நாங்கள் பொழுது போக்கும் மகிழ்ச்சியில் இங்கு வந்தோம். ஆனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம் என்று வேதனையோடு கூறினார்.
Related Tags :
Next Story