நாளை திறக்கப்படுவதையொட்டி தஞ்சையில், உடற்பயிற்சி கூடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்


நாளை திறக்கப்படுவதையொட்டி தஞ்சையில், உடற்பயிற்சி கூடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 July 2021 4:52 PM GMT (Updated: 4 July 2021 4:52 PM GMT)

நாளை திறக்கப்படுவதையொட்டி தஞ்சையில், உடற்பயிற்சி கூடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டது.

அதன்படி தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. இதனால் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டவர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் அவர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நவீன உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. இது தவிர கிராமப்புறங்களில் உடற்பயிற்சி கூடங்கள், அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் வீரர்களும் உடற்பயிற்சியை தொடர முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும் நவீன உடற்பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள் பெரும்பாலும் வாடகை கட்டிடத்தில்தான் நடத்தி வந்தனர். வங்கியில் கடன் பெற்று உடற்பயிற்சி சாதனங்களை வாங்கி வைத்து நடத்தி வந்தனர். இதனால் ஊரடங்கு காரணமாக கடனை கட்ட முடியாமலும், வாடகை செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிக்கப்பட்டு வந்தது. ஆனால் தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று குறையாததால் தளர்வுகள் அறிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்துக்கும், வழிபாட்டு தலங்களை திறக்கவும், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் நாளை முதல் உடற்பயிற்சி கூடங்கள் அரசின் வழிகாட்டுதல் முறைப்படி திறக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த 69 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த உடற்பயிற்சி கூடங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. இதையடுத்து உடற்பயிற்சி கூடங்களின் உரிமையாளர்கள் அதனை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி விளையாட்டு வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story