கிருஷ்ணகிரி அருகே பணம் இரட்டிப்பு செய்ய முயன்ற 6 பேர் கைது; ரூ.70 லட்சத்துடன் தப்பிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


கிருஷ்ணகிரி அருகே பணம் இரட்டிப்பு செய்ய முயன்ற 6 பேர் கைது; ரூ.70 லட்சத்துடன் தப்பிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 July 2021 10:51 PM IST (Updated: 4 July 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே பணம் இரட்டிப்பு செய்ய முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.70 லட்சத்துடன் தப்பிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:
இது பற்றிய விவரம் வருமாறு:-
மொத்த காய்கறி வியாபாரி 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவரை தெருவை சேர்ந்தவர் நாசர் (வயது 38). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காய்கறிகளை, விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அந்த காய்கறிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை மொத்தமாக பணம் கொடுத்து வருவதை நாசர் வழக்கமாக கொண்டிருந்தார். 
இவரிடம் லோடுமேன்களாக கும்பகோணம் திருவிடைமருதூர் ராஜேஷ் (26), முத்தையா நகர் மோகன்ராஜ் (27), ஜெயக்குமார் (36), கேஷியராக மல்லப்பாளையத்தை சேர்ந்த முத்துகுமரன் (32), டிரைவராக கீழ பரட்டை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்கிற நரி (25) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இரட்டிப்பாக்க முயற்சி 
இந்தநிலையில் நாசர் சென்ற மாதம் வாங்கிய காய்கறிகளுக்கு விவசாயிகளுக்கு ரூ.1 கோடி கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. அந்த நேரம் லோடுமேன் ராஜேஷ், கேஷியர் முத்து குமரன் ஆகியோர் தங்களுக்கு தெரிந்தவர்கள் 2 பேர் உள்ளனர் என்றும், அவர்களிடம் பணம் கொடுத்தால் அதை இரட்டிப்பாக்கி தருவார்கள் என்றும், ரூ.80 லட்சம் கொடுத்தால், நாங்கள் ரூ.1 கோடி வாங்கி தருகிறோம் என்றும் கூறினர். இதற்கு ஆசைப்பட்ட நாசர் உடனடியாக ரூ.80 லட்சம் புரட்டி, முத்து குமரன், ராஜேசிடம் கொடுத்தார்
இதையடுத்து ராஜேஷ், முத்துகுமரன், ஜெயக்குமார், மோகன்ராஜ், டிரைவர் காமராஜ் ஆகிய 5 பேரும் காய்கறி வண்டியில் ரூ.80 லட்சத்துடன் கிருஷ்ணகிரிக்கு கடந்த 2-ந் தேதி வந்தனர். பின்னர் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறிய காஞ்சீபுரத்தை சேர்ந்த அபுபக்கர், பண்டரி ஆகியோரிடம் ரூ.70 லட்சத்தை கொடுத்தனர். ரூ.10 லட்சத்தை தங்களுக்கு எடுத்து வைத்து கொண்டனர்.
போலீசில் புகார்
இதனிடையே அபுபக்கர், பண்டரி ஆகியோர் ரூ.1 கோடியை குப்பம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே தருவதாக ராஜேசிடம் கூறினர். இதைத்தொடர்ந்து அபுபக்கர், பண்டரி ஒரு காரில் ரூ.70 லட்சத்துடனும், காய்கறி வண்டியில் ராஜேஷ் உள்ளிட்ட 5 பேரும் சென்றனர். இந்தநிலையில் குப்பம் சாலையில் போலீஸ் ஜீப் ஒன்று நின்றதை பார்த்து அபுபக்கர், பண்டரி ஆகியோர் அங்கிருந்து ரூ.70 லட்சத்துடன் காரில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் அவர்களின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தனர்.
இதுகுறித்து ராஜேஷ், நாசருக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நாசர், ராஜேஷ், மோகன்ராஜ், ஜெயகுமார், முத்துகுமரன், காமராஜ் ஆகிய 6 பேரும் மகராஜகடை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர்.
6 பேர் கைது
இது குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி பணத்தை இரட்டிப்பாக்க முயன்றதாக நாசர், ராஜேஷ், மோகன்ராஜ், ஜெயகுமார், முத்துகுமரன், காமராஜ் ஆகிய 6 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும் ரூ.70 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய அபுபக்கர், பண்டரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story